×

இந்த வார விசேஷங்கள்

14.10.2023 – சனிக்கிழமை மஹாளயம்

அமாவாசைகளில் தை அமாவாசைக்கும் ஆடி அமாவாசைக்கும் மிகப்பெரிய ஏற்றம் உண்டு. ஒன்று உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பிக்கும் போது வரும் அமாவாசை. (தை அமாவாசை) இன்னொன்று தட்சிணாயண புண்ணிய காலம் வரும் ஆடி அமாவாசை. இந்த இரண்டு அமாவாசைகளையும் அவசியம் நீத்தார் நினைவு வழி பாட்டாக கடைபிடிக்க வேண்டியது அவசியம். தெய்வ வழிபாட்டை மறந்தாலும் முன்னோர் வழிபாட்டை மறக்கக்கூடாது.

அப்படி ஒருகால் மறந்து விட்டால் வருடத்திற்கு ஒருமுறை வருகின்ற புரட்டாசி மாத தேய்பிறை மகாளய அமாவாசை காலத்தை மறக்கவே கூடாது.அதனால் தான் மறந்தவனுக்கு மஹாளயம் என்ற முதுமொழி வந்தது. காரணம் பித்ருக்கள் தங்கள் உலகத்தில் இருந்து நம்முடைய உலகம் தேடி இந்த 15 நாட்களும் வந்து நம்மோடு இருக்கிறார்கள். இந்த அமாவாசையின் இன்னொரு முக்கியமான சிறப்பு இதில் காருணிக பிதுர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு பங்கு உண்டு.

மாற்றாந்தாய் (ஸபத்னீ மாதரம்), பெரியப்பா (ஜ்யேஷ்டபித்ருவ்யம்), சித்தப்பா (கனிஷ்டபித்ருவ்யம்), சகோதரன் (ப்ராதரம்), மகன்கள் (புத்ரம்), அத்தை (பித்ருஷ்வஸாரம்), தாய் மாமன் (மாதுலம்), தாய்வழி சகோதரி (மாத்ருஷ்வஸாரம்), வளர்ப்புத்தாய் (தாத்ரிம்), சகோதரி (பகினீம்) என்பவர்களுக்கு மகாளய பட்ச காலத்தில், சாஸ்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மகள் (துஹிதரம்), மனைவி (பார்யாம்), மாமனார் (ச்வசுரம்), மாமியார் (ச்வச்ரூம்), சகோதரியின் கணவர் (பாவுகம்), மருமகள் (ஸ்னுஷாம்), மச்சினன் (ஸ்யாலகம்), ஒன்று விட்ட சகோதரன் (பித்ருவ்யபுத்ரம்), மாப்பிள்ளை (ஜாமாதரம்), மருமகன் (பாகினேயம்), குரு (குரூன்), ஆச்சார்யன் (ஆச்சார்யான்), தோழன் (ஸகீன்) என்று விவரிக்கிறது தர்ம சாஸ்திரம். யார் யாருக்கு எல்லாம் தர்ப்பணங்கள் கொடுக்கப்படவில்லையோ அவர்களுக்கும் சேர்த்து ஒவ்வொருவரும் தர்ப் பணம் கொடுக்கும் வாய்ப்பு இந்த மகாளய பட்சத்திற்கு உண்டு.

இந்த தர்ப்பணங்களில் பலன்களை எல்லாம் பித்ருகளுக்கு கிடைக்கச் செய்கின்ற காப்பாளராக இருக்கக்கூடிய மகாவிஷ்ணுவுக்கும் உரிய மாதம் இந்த புரட்டாசி மாதம் .
அதனால்தான் இந்த புரட்டாசி மாதத்தில் தென் புலத்தார் வழிபாடு விசேஷமாக இருக்கிறது. அமாவாசை அன்று காலையில் எழுந்து வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து அருகில் உள்ள கோயில்களில் இருக்கும் நீர்நிலை களிலோ கடற்கரைப் பகுதிக்கோ குளக் கரைகளுக்கோ கிணற்றடிகளுக்கோ, வீட்டிலோ முன்னோர்களை நினைத்து அவர்கள் பெயரையும் கோத்திரத்தையும் சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். காலையில் எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து வழிபட வேண்டும்.அவர்களுக்கு பிடித்த சாத்வீகமான உணவு(பெரும்பாலும் வடை பாயசம், எள்ளுருண்டை முதலியவற்றை தலைவாழை இலையில் படைத்து வணங்க வேண்டும். அன்றைய தினத்தில் அன்னதானமும் செய்ய வேண்டும்.

இந்தத் தர்ப்பணங்களை குறிப்பிட்ட சில தலங்களில் கொடுப்பது மிகவும் சிறப்பானது. இராமேஸ்வரம் கோடியக்கரை, பவானி, ஆடுதுறை, குமரித்துறை, தில தர்ப்பணபுரி, திருவையாறு, மன்னார்குடி, வேதாரண்யம், ரங்கத்தில் அம்மா மண்டபம் ஆகிய இடங்களில் கொடுப்பது சாலச் சிறந்தது. வடக்கே கயா காசியில் கங்கை நதி தீரத்தில் கொடுப்பது அருமையானது.  இந்தத் தர்ப்பணத்தால் பித்ருக்களுக்கு பசியும் தாகமும் தீரும். அவர்கள் நல்லாசி குடும்பத்திற்கு கிடைக்கும். தீர்க்காயுள் கூடும். அன்றைய தினம் பசுவுக்கு அகத்திக்கீரை மற்றும் பழம் முதலியவற்றை வழங்க வேண்டும்.  முன்னோர்கள் ஆசி பலம் இருந்தால் குடும்பத்தில் சுப காரியத் தடைகள், குழந்தை இல்லாத கவலை முதலியவை நீங்கும். எத்தகைய நவகிரக தோஷங்களும் தீரும். குடும்பத்தின் அமைதியும் நிம்மதியும் நிலவும்.

14.10.2023 – சனிக்கிழமை புரட்டாசி கடைசி சனிக்கிழமை

பெருமாளுக்கு உரிய விசேஷமான நாள் சனிக்கிழமை. அதிலே புரட்டாசி சனிக்கிழமை என்பது மிக மிக விசேஷம். புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தான் திருமலையில், ஒப்பிலியப்பன் கோயிலில், திரு அண்ணன் குளத்தில்,பெருமாள் அவதார உற்சவம் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படும். இன்றைய தினம் திருக்குறுங்குடி அழகிய நம்பிகள் திருக்கோயிலில் 10 நாள்கள் டோலோற்சவம் நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகாமையில் உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிவில் இன்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமை கருட சேவை உற்சவம் நடைபெறும்.

விருத் தாசலத்தில் 28 பெருமாள்களின் கருடசேவை காட்சி கோலாகலமாக நடைபெறும். இன்றைய தினம் வீட்டை தூய்மைப்படுத்தி பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி அவருடைய ஸ்தோத்திரங்களையும் ஆழ்வார்கள் பாசுரங்களையும் பாராயணம் செய்ய வேண்டும். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சைச் சாதம், வடை, சுண்டல், பாயசம் முதலிய நிவேதனங்களைப் படைத்து அதை மற்றவர்களுக்கும் அளித்துக் கொண்டாட வேண்டும். அதனால் பெருமாளின் பரிபூரணமான அனுக்கிரகம் கிடைக்கும். தீப ஆராதனை செய்யும் பொழுது அழகான இந்த இரண்டு பாசுரங்களை சொல்ல பலன்கள் அதிகரிக்கும்.

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி,
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,
எழில்கொள் சோதி எந்தைதந்தை
தந்தைக்கே
தாள்ப ரப்பிமண் தாவிய ஈசனை,
நீள்பொ ழீல்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கேழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.

15.10.2023 – ஞாயிறு நவராத்திரி

இன்றிலிருந்து நவராத்திரி தொடங்குகிறது. நவராத்திரி என்பது தெய்வீகப் பண்டிகை மட்டுமல்ல. அதற்கு வேறு காரணங்களும் நோக்கங்களும் உண்டு. இந்தப் பண்டிகை கல்வியின் திருவிழா. இந்த பண்டிகை தொழில்களின்
திருவிழா. இந்தப் பண்டிகை கலைகளின் திருவிழா இந்த பண்டிகை ஒற்றுமையின் திருவிழா இந்த பண்டிகை கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் திருவிழா என்று பல கோணங்கள் நவராத்திரிப் பண்டிகைக்குச் சொல்லலாம். இந்த அமைப்பு வேறு பண்டிகைகளுக்கு இல்லை. ஒரு மனிதன் படிப்படியாக வாழ்வில் எப்படி எல்லாம் உயர வேண்டும் என்பதை கொலுப் படிகளை வைத்துக் காண்பிக்கின்றோம். பாட்டும் நடனமும், உறவுகளின் சேர்க்கையும் பின்னிப் பிணைந்த இந்தத் திருவிழாவில் மன மகிழ்ச்சி மட்டுமல்ல ஆன்ம மகிழ்ச்சியும் உண்டு.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நவராத்திரி முதல் நாள் மது கைடபர் என்ற இரு அரக்கர்களை அழித்தார். அநீதியை அழித்து நீதியை நிலைநாட்டினார். “தர்மம் வெல்லும், அதர்மம் தோற்கும்” என்பதை உணர்த்தும் இந்த பண்டிகையில் 9 நாளும் ஒவ்வொரு விசேஷம். நவராத்திரியின் நிறைவு நாளான மஹா நவமி அன்று கலைமகளுக்கு விழா எடுப்பார்கள். சரஸ்வதி பூஜை என்று கொண்டாடு வார்கள். அதற்கு அடுத்த நாள் வெற்றியைக் கொண்டாடும் விஜயதசமி
திருவிழா.

பெண்கள் விரதம் இருந்து காலையில் மாலையிலும் நீராடி பூஜை செய்ய வேண்டும். கன்னிப் பெண்களை இந்த காலத்தில் தேவியின் அம்சமாக பாவித்து வணங்குவது சிறப்பு. அவர்களுக்கு அவரவர்கள் சக்திக்கு ஏற்றபடி ஆடைகள் (குறைந்தது ஜாக்கெட் பிட் ) மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு தட்சணை வைத்துக் கொடுக்க வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும் அடுத்த மூன்று நாட்கள் மகா லட்சுமிக்கும் அடுத்த மூன்று நாட்கள் கலைமகளுக்கும் என இந்த விழா அமைந்திருக்கிறது. நவராத்திரி உற்சவத்தை ஒட்டி பல திருக்கோயில்களிலும் கொலூ தர்பார் காட்சி நடக்கும். குறிப்பாக ஸ்ரீரங்கத்திலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் குடந்தை கும்பேஸ்வரர் கோயிலிலும் கொலு
தர்பார் விசேஷமாக இருக்கும். எல்லா பெருமாள் ஆலயங்களிலும் தாயாருக்கு விசேஷமான திருமஞ்சனம், தர்பார், அலங்காரம், பிரகார புறப்பாடு, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

18.10.2023 – புதன்கிழமை துலா ஸ்நானம்

இன்று சூரிய பகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசியில் பிரவேசிக்கிறார். துலா மாதம் (ஐப்பசி) என்பது இருளும் பகலும் சமமாக துலாக்கோல் போல உள்ள மாதம். சுக்கிரனுக்கு உரிய ராசி துலா ராசி. இந்த வருடம் சூரியன் துலா ராசியில் நுழையும் பொழுது துலா ராசிக்குரிய சுக்கிரன் சிம்ம ராசியில் இருக்கிறார். இதனால் சூரியனுக்கு வேறு எந்த ஆண்டிலும் கிடைக்காத பரிவர்த்தனை யோகம் ஏற்பட்டு அவருடைய நீசத்தன்மை பங்கம் ஆகிறது. அதோடு மேஷத்தில் இருந்து குருவின் பார்வையும் சூரியனுக்குக் கிடைப்பதால் சூரிய குரு யோகம், குரு மங்கள யோகம் என பல யோகங்கள் இந்த ஐப்பசி மாதத்திற்கு உண்டு. இன்றைய தினம் மாதப் பிறப்பாக இருப்பதால் காலையில் எழுந்து நீராடி, தேவர்களுக்கும் முன்னோர்களுக்கும் வெறும் நீரால் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும். மாலையில் கோயிலுக்குச் சென்று ஒரு தீபம் ஏற்றி வழிபடுவதும் சகல தோஷங்களையும் நீக்கும்.

மேலும், இன்று சதுர்த்தி தினமாக இருப்பதால் மாலையில் விநாயகர் கோயிலில் நடைபெறும் அபிஷேக ஆராதனை களில் கலந்து கொள்வதும் நல்லது. ஐப்பசி ஒன்று, தேவகோட்டை மணிமுத்தாறு நதிக்கு அந்த ஊரின் சகல ஆலய மூர்த்திகளும் எழுந்தருளி விஷூ உற்சவம் கண்டருள்வர் தீர்த்தவாரி நடைபெறும். நாளை (ஐப்பசி 2) வியாழக்கிழமை திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும்.

20.10.2023 வெள்ளிக்கிழமை – சஷ்டி

மிக விரைவில் ஸ்கந்த சஷ்டி விழா நடைபெற உள்ளது .அதற்கு முன்னால் வருகின்ற சஷ்டியாக இந்த சஷ்டியை கொள்ளலாம். முரு கனுக்கு உரிய வழிபாட்டு நாள். காலை முதல் விரதமிருந்து மாலையில் முருகன் கோயிலுக்குச் சென்று செவ்வரளிப் பூக்களை சாற்றி மாலையில் நடைபெறும் விசேஷமான அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு சஷ்டி விரதம் இருப்பதால் சகல நற்பலன்களும் கிடைக்கும். இந்தக் காலத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம், திருப்புகழ் பாராயணம் முதலிய முருகன் பாடல்களையும் ஸ்தோத்திரங்களையும் பாராயணம் செய்வது அற்புதமான பலன்களைத் தரும்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Mahalayam New Moons ,Tai Amavasya ,Adi Amavasas ,Puniya ,
× RELATED திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம்